கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது.
கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், இந்தத் தாக்குதலால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தச் சூழலில், கத்தாரில் வசிக்கும் புகழேந்தி என்ற தமிழர் ஒருவர், ஒன்இந்தியா தளத்திற்குத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
தாக்குதல் நடந்தபோது, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் இடிந்து விழுவது போல அதிர்ந்ததாகவும், தனது மனைவியும் குழந்தையும் மிகவும் பயந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏவுகணைகள் பாய்வதையும், அவை இடைமறித்து அழிக்கப்படுவதையும் நேரில் கண்டதாகவும் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒருவித பயத்துடனே வாழ்ந்து வருவதாகவும், கத்தார் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற தாக்குதலைத் தான் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருப்பதாகவும், இதுவே முதல்முறை நேரில் கண்டதாகவும் அவர் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த பகுதி குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், பாலைவனம் போன்ற இடத்தில் இருந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனினும், தாக்குதல் முடிந்து பல மணிநேரங்கள் கடந்தும் தனக்கு இன்னும் பதற்றம் குறையவில்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

